முருகன் மந்திரம் (MURUGAN MANTHIRAM)

முருகன் மந்திரம் (பிறப்பு: மார்ச் 30, 1976) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்,
வசனகர்த்தா, கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர். திரைப்படப் பாடல்களுடன்
கூடவே வசனமும் எழுதுகிறார். இவரது எழுத்தில் பகுத்தறிவும் தத்துவமும் நிறைந்து
கிடக்கிறது. நிறைய படங்களில் துணை, இணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
இவர் எழுதிய விலகுது திரை தனிப்பாடல் தொகுப்பில், இதயம் தந்தேன், மற்றும்
கண்களோடு பாடல்களை இயக்கி இருக்கிறார். இயக்குநர் என்ற இலட்சியத்தோடு
சென்னை வந்தவர், பாடலாசிரியர் ஆகவும் பெயர் பெற்றுவிட்டார். இயக்குநர்
இலக்கையும் விரைவில் அடைவதற்கான முயற்சிகளில் இருக்கிறார்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு அருகில் உள்ள அம்மச்சிக்கோயில் கிராமத்தில்
மந்திரம், லலிதா இணையருக்கு மார்ச், 30 1976ல் பிறந்தார். அப்பாவுக்கு இரண்டு
இணையர்கள். லலிதா மற்றும் அவரின் உடன்பிறந்த சகோதரி ஜெயக்கொடி.
முன்னவருக்கு பல்லாண்டு காலமாக குழந்தை இல்லாததால், தன் தங்கையை கணவருக்கு
மணம் முடித்து வைத்தார். அதன்பின்னர் இருவருக்குமாகப் பிறந்த 7 குழந்தைகளில்
நான்காவதாகப் பிறந்தார் முருகன் மந்திரம். நான்கு சகோதரிகள். இரண்டு சகோதரர்கள்.

அம்மச்சிக்கோயில் எம்இஎல்ஐம்(MELIM) பள்ளியில் தொடக்கக்கல்வியையும்,
தெற்குவள்ளியூர் ஆர் சி நடுலைப்பள்ளியில் நடுநிலைக்கல்வியையும் பயின்றவர்,
வள்ளியூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரைப் படித்தார்.
ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் இளங்களைப் பொருளியல் பயின்று
பட்டதாரியானார். அதன்பின்னர் பட்டம் பெற்ற அதே மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தின் வழியாக கணிணித்துறையில் முதுகலைப்பட்டயப்படிப்பு (PGDCA
– Post Graduate Diploma in Computer Applications) பயின்றார். பின்னர்
அரினா(ARENA) தனிப்பயிற்சி நிறுவனத்தில் மேம்பட்ட பல்லூடக பட்டயப்படிப்பு
(Advanced Diploma in Multimedia) பயின்றார்.

தனிவாழ்க்கை

2005ம் ஆண்டு கிருஷ்ணமணியை மணந்தார். மதிவாசகி என்ற மகளும் மகிழ்ச்சித்திரன்
என்கிற மகனும் உள்ளனர். மதிவாசகி சென்னை அரசு இசைக்கல்லூரியில் பி.ஏ. வயலின்
படிக்கிறார். மகன் 10ம் வகுப்பு படிக்கிறார்.

திரை வாழ்க்கை

பாடலாசிரியர்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சகோதரி, ஏ.ஆர்.ரைஹானா வழியாக திரைப்படப்
பாடலாசிரியராக “பேசுவது கிளியா” படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.
அதன்பின்னர் தேநீர் விடுதி, விருந்தாளி, காதல் பாதை, உ, சாரல், பயபுள்ள, சும்மாவே
ஆடுவோம், திருட்டு விசிடி, எங்கேயும் நான் இருப்பேன், கேக்கிறான் மேய்க்கிறான்,
எம்ஜிஆர் மகன், சைரன், ஏவாள், ஓ சுகுமாரி என பல படங்களில் 100க்கும் மேற்பட்ட
பாடல்களை எழுதி இருக்கிறார்.
சினிமா பின்னணி கதையம்சம் கொண்ட உ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி
இருக்கிறார். சூப்பர் சிங்கர் 3 வின்னர் ஆஜீத் முதன்முதலாக பாடிய திரைப்படப் பாடல்
“திக்கித் தெணறுது தேவதை”, முருகன் மந்திரம் எழுதிய பாடல் தான். எம்ஜிஆர் மகன்
படத்தில் இவர் எழுதியுள்ள “ஏறெடுத்துப் பாக்காம” மற்றும் சைரன் படத்தில் இவர்
எழுதியுள்ள “அடி ஆத்தி” உள்பட இவர் எழுதியுள்ள பல பாடல்கள் ரசிகர்களின்
வரவேற்பைப் பெற்ற பாடல்கள்
திரைப்படங்களில் மட்டுமல்லாது தனிப்பாடல்களும் நிறைய எழுதி இருக்கிறார்.
அமெரிக்க வாழ் தமிழ் இசையமைப்பாளர் கார்த்திகா மகாதேவ் இசையமைத்து தயாரித்த,
“விலகுது திரை” தனிப்பாடல் தொகுப்பின் அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
அதுதவிர, மார்த்தாண்ட சக்கரவர்த்தி மினி வெப் தொடரில் பிரேம்ஜி பாடியுள்ள, “கிழவி
ஆந்தம்”, “நான் கண்ட ஓர் தெய்வம்”, பிரயான் பேண்ட் உடன் இணைந்து “உயிரே என்
காதலே”, நிகில் மேத்யூ, இஷான் தேவ் உடன் இணைந்து “யாதும் ஊரே”, நடிகர்
விஷாலுக்காக “தலைவன் வருகின்றான்”, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர்
திருமாவளவன் பிறந்தநாள் பாடல், “ஆகத்து17”, “வானவில் நான் வானவில் “,
“கூத்துராசா ஆதிசிவன்”, சோனி நிறுவனத்திற்காக அந்தோணிதாசன் இசையில், “என்ன
நீயும் கொண்டு வந்த”, “வெள்ளப்பஞ்சுப் பூவே” உள்பட நிறைய தனிப்பாடல்களை எழுதி
இருக்கிறார்.

பக்தி இசையில், பேரழகே எனும் கிறிஸ்தவ ஆல்பம், மற்றும் பச்சைப்புடவைக்காரி எனும்
தொலைக்காட்சி தொடருக்காக மதுரை மீனாட்சி அம்மனைப் பற்றிய பாடலையும்
எழுதியுள்ளார்.

வசனகர்த்தா

பிராஷ் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் உருவான “ஆபரேஷன் அரபைமா” படத்திற்கு
முதன் முதலாக வசனம் எழுதினார். அதனைத் தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் நடிப்பில்
உருவான “உங்களைப் போடணும் சார்” படத்திற்கு வசனம் எழுதினார். பின்னர், நமீதா
நடிப்பில் உருவான “பௌவ் வௌவ்”, அங்காடித் தெரு மகேஷ் நடிப்பில் “ஏவாள்”,
சம்பத்ராம் நடிப்பில் “திவ்யா” உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதினார். தற்போது நீலம்
புரொடக்சன்ஸ் மற்றும் பா.இரஞ்சித்தின் மக்கள் தொடர்பாளரும் எழுத்தாளருமான
குணசீலன் ராமையா இயக்கத்தில் உருவாகும், “சாமி கொண்டாடி” படத்திற்கு இணை
வசனம் எழுதி இருக்கிறார்.
உதவி, துணை, இணை இயக்குநர்
திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முருகன் மந்திரம், பின்னர் தான்
வசனம் எழுதிய அனைத்துப் படங்களிலும் இணை இயக்குநராகவும் பணியாற்றி
இருக்கிறார்.

நடிகர்

இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் நரேஷ்குமார் இயக்கத்தில் உருவான,
“தாத்தா” குறும்படத்தில் பிரபல நடிகர் ஜனகராஜின் நண்பராக நடித்திருக்கிறார்.
உங்களைப் போடணும் சார் படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். நீலம்
புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்திலும், குணசீலன் இராமையா
இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்திருக்கிறார்.
சமூகம்
இயக்குநர் பா.இரஞ்சித் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒரு முன்னெடுப்பாகத் தொடங்கிய
கூகை நூலகம், கூகை திரைப்பட இயக்கம் ஆகியவற்றை நிறுவிய குழுவில் ஒருவராக
இருந்தார். கூகை நூலக அரங்கில் அதன் தொடக்காலத்தில் நிகழ்ந்த இலக்கிய, திரைப்பட
நிகழ்வுகள், பயிலரங்கங்கள் அனைத்தையும் கவின் ஆண்டனியுடன் சேர்ந்து
ஒருங்கிணைத்தார்.
மார்கழியில் மக்களிசை முதல் நிகழ்வான, 3 நாட்கள் நடைபெற்ற வானம் கலைவிழாவின்
தொகுப்பாளராக 3 நாள் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

எழுத்து வாழ்க்கை

இதழாளர்

சென்னையில் இருந்து வெளியான “தங்கம்” மாத இதழின் நிர்வாக ஆசிரியராக 8
வருடங்கள் பணியாற்றினார். திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்களையும் சமூகப்
பார்வையுடன் கூடிய அரசியல் கட்டுரைகளையும் அதில் தொடர்ந்து எழுதினார்.

நூல்கள்

ஒரே ஒரு ராஜா ஒரு கோடி கதைகள் / நாற்கரம் பதிப்பக வெளியீடு
கொலசாமியும் கோனிகா மினோல்டாவும் / டிரவிடியன் ஸ்டாக் வெளியீடு
இணையத்தில் உள்ள நூல்கள்
ரதிநதி / கவிதைத்தொகுப்பு
திகட்ட திகட்ட காதல் செய் / வசனக்கவிதை கட்டுரைகள்
பரியேறும் பெருமாளும் அசுரனும் எதை மாற்றி விட முடியும்? (திரைப்பட விமர்சனங்கள்)
ஒரு அஸிஸ்டென்ட் டைரக்டரின் அனுபவங்கள் / கட்டுரைத் தொகுப்பு

பதிப்பாளர்

பதிப்பாளராக தனது “மதிமகிழ்” பதிப்பகத்தின் வாயிலாக கௌதம் வெங்கடேஸ்வரன்
எழுதிய, “நேரம் இரவின் காலை 3 மணி”, டிஜே டேனியல் எழுதிய, “மூதின் முல்லை”
ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

Songs by Murugan Manthiram